அன்னையர் தின ஸ்பெஷல் மாம்பழ கேக்

ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர்
தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் ஒரு நாள் கூட
விடுமுறை இல்லாமல் செய்யும் ஒரே வேலை என்றால் அது அம்மாக்களின் சமையல்
வேலை மட்டும் தானே. அப்படிப்பட்ட அம்மாவிற்காக வருடத்தில் ஒரு நாள்
அதுவும் அன்னையர் தினத்தன்று நாம் சமைத்துக் கொடுத்தால் அவர்கள்
எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்.

உங்கள் அம்மாவிற்கு என்ன உணவு பிடிக்கும் என்று உங்களுக்குத்
தெரியுமா? உங்கள் அம்மாவிற்கு இனிப்பு பிடிக்கும் என்றால் இங்கே
கொடுக்கப்பட்டுள்ள மாம்பழக் கேக்கை ட்ரை செய்து பாருங்கள். இது
அனைவருக்குமே பிடித்த உணவு தான். இதை மட்டும் நீங்கள் உங்கள்
அம்மாவிற்கு செய்து கொடுத்தால் அவரது சந்தோஷத்திற்கு அளவே
இருக்காது.

How To Prepare Mango Layer Cake For Mother’s Day

வாருங்கள் இப்போது நாம் மாம்பழக் கேக் செய்யத் தேவையானப்
பொருட்களையும் மற்றும் எப்படி செய்வதென்பது பற்றியும்
பார்ப்போம்…

கேக் செய்யத் தேவையானப் பொருட்கள்:

1. முட்டை – 2

2. பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

3. கேக் மாவு – 3/4 கப்

4. உப்பு – 1/4 டீஸ்பூன்

5. சர்க்கரை – 1 கப்

6. உப்பில்லா வெண்ணெய் – 100 கிராம்

7. வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

8. எலுமிச்சைச் சாறு – 1/8 டீஸ்பூன்

9. பால் – 1/2 கப்

க்ரீம் செய்யத் தேவையானப் பொருட்கள்:

10. டபிள் க்ரீம் – 1 கப்

11. மாம்பழ துண்டுகள் – 1 கப்

12. ஐஸிங் சுகர் – 2 டேபிள் ஸ்பூன்

13. வெண்ணிலா சாறு (vanilla extract) – 1 டீஸ்பூன்

மாம்பழத் தயிர் செய்யத் தேவையானப் பொருட்கள்:

14. மாம்பழம் – 500 கிராம் (சிறிதாக நறுக்கியது)

15. முட்டையின் மஞ்சள் கரு – 4

16. சர்க்கரை – 1/3 கப்

17. உப்பு – ஒரு சிட்டிகை

18. எலுமிச்சைச் சாறு – 3 டேபிள் ஸ்பூன்

19. ஆலிவ் ஆயில் – 1/4 கப்

மாம்பழக் கேக் செய்ய பொறுமை மிக அவசியம். சிறிது நேரம் ஆகும் இதை
செய்து முடிக்க. அவசரப்படாமல் பொறுமையாக செய்தால் நிச்சயம் உங்களுக்கு
பாராட்டு மழை தான். அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

கேக் செய்யும் முறை:

1. கேக் செய்யும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப்
பாத்திரம் முழுவதும் வெண்ணெய் தடவி சிறிது மாவை எல்லாப் பக்கங்களிலும்
படும்படி தூவி விடவும்.

2. வேறு ஒரு பாத்திரத்தில் கேக் மாவு, பேக்கிங் பவுடர், உப்பு,
வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மிருதுவாக கலந்துக்
கொள்ளவும்.

3. மற்றொரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை உடைத்து
ஊற்றி நன்கு கலந்துக் கொண்டு, பின் அடுத்த மஞ்சள் கருவை ஊற்றி கலக்க
வேண்டும். பின்னர் வெண்ணிலாச் சாறு, பால் மற்றும் எலுமிச்சைச் சாறு
சேர்த்து ஒரு சேர கலந்து, நல்ல மிருதுவான மாவு பதத்தில் செய்துக்
கொள்ளவும்.

4. இந்தக் கலவையை முதலில் செய்த மாவுக் கலவையுடன் சேர்த்துக்
கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி
தயாராக வைத்துக் கொள்ளவும்.

5. 180 டிகிரியில் சூடு செய்து வைத்த மைக்ரோவேவ் ஓவனில், கேக்
பாத்திரத்தை வைத்து 20 முதல் 25 நிமிடம் வைத்து பேக்கிங் செய்து கொள்ள
வேண்டும்.

6. வேக வைத்த கேக்கை நன்கு ஆற விடவும்.

மாம்பழத் தயிர் செய்யும் முறை:

1. மாம்பழத் துண்டுகள், உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ளவும்.

2. அத்துடன் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து மீண்டும் அரைத்துக்
கொள்ளுங்கள். அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தண்ணீர்
சேர்த்து மிதமான தீயில் கெட்டியான பேஸ்டாகும் வரை வைக்க வேண்டும்.

3. சரியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆலிவ்
ஆயில் சேர்க்க வேண்டும். இதை நன்கு மூடி இரவு முழுவதும் பிரிட்ஜில்
வைக்க வேண்டும்.

கேக் அலங்கரிக்கும் முறை:

1. ஒரு பாத்திரத்தில் மாம்பழத் துண்டுகளைத் தவிர க்ரீம் செய்யத்
தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து க்ரீமாக கலந்துக்
கொள்ளவும்.

2. பின் செய்து ஆற வைத்திருக்கும் கேக்கை லேயர்களாக (Layers)
வெட்டிக் கொண்டு ஒரு துண்டை பரிமாறும் தட்டில் வைக்க வேண்டும். அதன்
மீது மாம்பழத் தயிரை தடவ வேண்டும். பின்னர் க்ரீமை தடவ வேண்டும்.
அவற்றின் மீது மாம்பழத் துண்டுகளை வைக்க வேண்டும்.

3. இதே போல் ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மாம்பழத் தயிர் மற்றும்
க்ரீம் சேர்த்து கேக் முழுவதையும் செய்து முடிக்க வேண்டும்.

4. செய்து முடித்த கேக்கை பிரிட்ஜில் வைத்து ஜில் என்று
பரிமாறுங்கள்.

இந்த கேக் முழுவதையும் செய்து முடிக்க நேரம் நிறையத் தேவைபடும்
தான். ஆனால், இதை செய்து முடித்து உங்கள் அம்மாவிற்கு நீங்கள்
கொடுக்கும் போது அவரது சந்தோஷத்தைக் கூற வார்த்தைகளே இருக்காது. அவரது
முகத்தில் நீங்களே அதை பார்த்து உணரலாம்.


Tagged in:

Related articles

Leave a Reply